வேதபுரீ வேந்தன் 'எல்லோரையும் பிராமணன் ஆக்க இங்கு குருதேவர் இவரை (சுவாமி ஓங்காராநந்தரை) அனுப்பியுள்ளார்' - என ஸ்ரீஸ்வாமீ சித்பவாநந்தரால் புகழ்ந்து கூறப்பட்ட சுவாமி ஓங்காராநந்தர் பிறந்தது கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பேரூர் ஆகும். எளிமையான, அமைதியான குடும்பம். ஆனால் ஆன்மிகமயமான குடும்பம். ஸ்ரீஸ்வாமிஜியின் ஆன்மிக ஈடுபாட்டுக்கும் வேத சாஸ்த்ரங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் தோன்றியதற்கும் வித்தாக இருந்தது அவரது ஆன்மிகமயமான வீடுதான் என்று கூறினால் அது மிகையல்ல. ஸ்ரீஸ்வாமிஜியின் தாத்தாக்கள் இருவரும் வேத சாஸ்த்ரங்களில் நிபுணர்கள். எளிமையான வாழ்க்கை முறையைக் கடைப்பிடித்து வாழ்ந்தவர்கள். தந்தை வைத்தியநாத கனபாடிகள் பேரூர் பட்டீஸ்வரர் கோயிலில் வேத பண்டிதர். தாயார் அலமேலு. ஒரு இந்துப்பெண்மணி எப்படி இருக்க வேண்டும், பிள்ளைகளை எப்படி முறையாக வளர்க்க வேண்டும், வருமானத்திற்குத் தகுந்தவாறு குடும்பச் சூழலை எப்படி அமைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்கு முன்னுதாரணமாய் விளங்கியவர் அலமேலு அம்மாள். 'அம்மா என்றால் எல்லோருக்கும் உயிர்தான். அம்மா என்று சொன்னாலே எனக்கு கண்ணீர் வந்துவிடும். அம்மா எனக்கு நல்ல நல்ல ச்லோகங்களைச் சொல்லிக்கொடுத்தார். நான் இந்தளவிற்கு இன்று இருக்கிறேன் என்றால் அதற்குக் காரணம் அம்மாதான். 'கடவுள்தான் உனக்குத் துணை; கடவுள் தான் உனக்கு எல்லாமே; கடவுளைத் தவிர வேறு எதையுமே நீ நினைக்கக்கூடாது' என எனக்கு அடிக்கடி போதித்துக்கொண்டு இருப்பார். நான் ஸந்யாஸியாக ஆனபிறகு அம்மாவுக்குப் போதிய பாதுகாப்பு வேண்டும் என்பதற்காக ஆச்ரமம் (தேனி) பக்கத்திலேயே குடி வைத்தேன். ஸந்யாஸி மரணம் போன்ற காரியங்களுக்குச் செல்லக்கூடாது. அதனால்தான் என்னவோ நான் இரவு விமானத்தில் புறப்பட்டு மலேசியாவில் இறங்குகிறேன். அம்மா இறைவனிடம் சேர்ந்த செய்தி எனக்கு வந்தது' என்று அம்மாவைப் பற்றி நெகிழ்ச்சியுடன் நினைவு கூர்கிறார் ஸ்ரீஸ்வாமிஜி.