அருட்குருநாதர்
நமது பெருமைமிகு தமிழகத்தில் பாரம்பரிய முறையில் வேதாந்தத்தை உபதேசிக்கும் தொண்டில் ஈடுபட்டுள்ள ஆசார்யார்களிடையே ஸ்ரீ ஸ்வாமீ ஓங்காராநந்தர் தமக்கென ஒரு சிறப்பான இடத்தை பெற்றுள்ளார். பூஜ்யஸ்ரீ ஸ்வாமிஜி அவர்கள் இளமையிலேயே மரபுவழியில் வேதத்தின் இரு பகுதிகளையும் முறையாகப் பயின்றவர். பேரூர் பட்டீஸ்வரர் திருக்கோயிலில் இறைபணியாற்றும் பாக்யத்தைப் பெற்றவர். பல கோயில்களில், யாகங்களில் வேதபாராயணம் செய்யும் வாய்ப்பையும் பெற்றவர். திருக்குறள், தேவாரம், திருவாசகம், திருமந்திரம், தாயுமானவர் பாடல்கள், முதலிய தமிழ் சமயநூல்களிலும் புலமை பெற்றவர். தமிழ், ஸம்ஸ்க்ருதம் ஆகிய இருமொழிகளிலும் உள்ள நூல்களை, கேட்பவர் எளிதாகப் புரிந்து கொள்ளும் வண்ணம் விளக்கும் ஆற்றல் படைத்தவர். நமது ஸநாதன தர்மம் பற்றிய எந்தக் கேள்விக்கும் தக்க ஆதாரங்களுடன் அளிக்கும் பதில்கள் நம்முடைய சந்தேகங்களை நிவர்த்தி செய்யும். வேதமந்திரங்களையும், தமிழ்ப் பாடல்களையும் மேற்கோள்காட்டி உள்ளத்தில் பதியும் வண்ணம் பேசும் திறமை மிக்கவர். தமிழகத்தின் பல பகுதிகளுக்குச் சென்று மாமறைகளில் கூறப்பட்டுள்ள விஷயங்களை உறுதியாகவும் தெளிவாகவும் சொற்பொழிவுகள் வாயிலாகப் பரப்பி வருகின்றார்.
04-05-1985 சித்ரா பௌர்ணமி நன்னாளில் பண்பாட்டின் சிகரமான பூஜ்ய ஸ்ரீ ஸ்வாமீ சித்பவாநந்தர் அவர்களிடம் ஸந்யாஸ தீக்ஷையும் ஸ்ரீ ஸ்வாமீ ஓங்காராநந்தர் என்ற யோக பட்டமும் பெற்றார்.
அந்தக் காலகட்டத்தில் கோவையில் பிரபல டாக்டர் கே.ஷண்முகசுந்தரம் குடும்பத்தினர் ஸ்ரீஸ்வாமிஜியிடம் பேரன்பும், பெருமதிப்பும் வைத்திருந்தனர். ஸ்ரீ ஸ்வாமிஜியின் சாஸ்த்ர ஞானத்தையும், பூஜைகள் செய்யும் நேர்த்தியையும் கண்டு அவருக்குப் பேராதரவு புரிந்தனர். ஸ்ரீ ஸ்வாமிஜியும் டாக்டரை வேதாந்த சாஸ்த்ர ப்ரசார ட்ரஸ்டின் அறங்காவலராக நியமித்து மகிழ்ச்சியுற்றார்.
1987 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஸ்ரீ ஸ்வாமிஜி அவர்கள் பூஜ்யஸ்ரீஸ்வாமீ பரமார்த்தாநந்தரைக் கோவையில் சந்தித்தார். பிறகு 1988 முதல் 1995 வரை ஸ்ரீஸ்வாமிஜி அவரிடம் வேதாந்த நூல்களை ஆழமாகப் பயின்றார். பெங்களூரில் சிலகாலம் தங்கி ஸம்ஸ்க்ருத பாஷையிலும் பாண்டித்யம் பெற்றார்.
ஸ்ரீஸ்வாமிஜி ஸந்யாஸ தீக்ஷை வாங்கியதும் அவருடைய குருநாதர் வேதாந்த சாஸ்த்ரங்களைப் பரப்பச் செய்யவேண்டும் என்று விரும்பினார். ஸ்ரீ ஸ்வாமிஜியும் குருவின் அன்புக்கட்டளையை ஏற்று, வேதாந்த நூல்களை மக்களிடையே பரப்பும் பணியில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். சுமார் 17 வருடகாலமாக சென்னை, தூத்துக்குடி, திருநெல்வேலி, ராஜபாளையம், சிவகாசி, விருதுநகர், மதுரை, சேலம், துறையூர், தேனி, எழுமலை, கம்பம், கே.கே.பட்டி, திண்டுக்கல், காரைக்குடி, பழனி முதலான நகரங்களில் கீதை, உபநிஷத்துக்கள், தாயுமானவர் பாடல்கள், கைவல்ய நவநீதம், ஆத்மபோதம், விவேகசூடாமணி முதலான நூல்களை முறையாக ஸம்பிரதாயப்படி வகுப்புகளில் விளக்கி வருகிறார். ஆயிரக்கணக்கான ஆண்களும், பெண்களும் ஆர்வத்துடனும், சிரத்தையுடனும் ஸ்ரீஸ்வாமீஜியின் வகுப்புகளில் நூல்களைக் கற்றுத் தத்துவங்களை அறிந்து பலனடைந்துள்ளனர் என்பது பெருமைப்பட வேண்டிய விஷயம். இப்படிக் கற்றவர்களில் பலர் ‘ஸ்வாத்யாய ப்ரவசனேச’ என்பதற்கிணங்கவும் தான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்ற நல்லெண்ணத்துடனும் குருவருளாலும், திருவருளாலும் இயன்றளவு சாஸ்த்ர வகுப்புக்களை நடத்தி வருகிறார்கள்.
ஸம்ஸ்க்ருத மொழியே தெரியாதவர்கள் – ஸ்ரீ ஸ்வாமிஜியின் வகுப்புகளைக் கேட்டே-அந்த புனித மொழியில் நாட்டம் கொண்டு படிப்பதற்கு வித்திட்டவர் ஸ்ரீ ஸ்வாமிஜி அவர்கள்தான். மதுரையிலும், ராஜபாளையத்திலும் வகுப்புகளை நடத்தி ஆர்வமுள்ளவர்கள் அனைவரும் அந்த மொழியைக் கற்று புலமைபெற பெருந்தொண்டாற்றி யுள்ளார்கள். மதுரை சாரதாஸமிதி, ராஜபாளையம், விருதுநகர், அருப்புக்கோட்டை முதலிய இடங்களில் ஸம்ஸ்க்ருதமொழி வகுப்புகளை நடத்தியதால் ஏராளமானவர்கள் வடமொழியைக் கற்று, மற்றவர்களிடையேயும் அதை வளர்த்தனர். ஸ்ரீஸ்வாமிஜியின் ஸம்ஸ்க்ருத ஸ்தோத்ரங்கள், உபநிஷத்துக்கள், பாராயண வகுப்புகளையும் பெரும் பாக்யமாக நினைத்துப் போற்றுகிறார்கள். தென்மாவட்டங்களில் சாஸ்த்ரங்களைப் பரப்புவதற்காக ஈச்வரனால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் நமது மதிப்பிற்குரிய ஸ்ரீ ஸ்வாமிஜி என்று கூறுவது மிகையாகாது.